348. மதுரை திவ்யதேசப் பயணம் - திருக்கோட்டியூர் - Part 1
ஏற்கனவே திட்டமிட்டு, சில பாண்டிய நாட்டு திவ்ய தேசப் பெருமாள்களை தரிசிக்க வேண்டி, சென்ற வாரம் சென்னையிலிருந்து மதுரை (நானும், துணைவியாரும், குழந்தைகளும்) சென்றோம். அப்பயணத்தில், திருமோகூர், திருக்கூடல், திருமாலிருஞ்சோலை (கல்லழகர்), திருக்கோட்டியூர், திருமெய்யம் ஆகிய வைணவ திருப்பதிகளுக்கும், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய அறுபடை வீடுகளுக்கும், பிள்ளையார்பட்டி மற்றும் திருமெய்யம் சத்யமூர்த்திப் பெருமாள் கோயில் அருகில் அமைந்துள்ள சத்யகிரீஸ்வரர் ஆலயத்துக்கும் சென்று வழிபட்டு, கொஞ்சம் புண்ணியம் தேட முடிந்தது :)
பயணக் கட்டுரையை திருக்கோட்டியூரிலிருந்து தொடங்குகிறேன்.
இந்த வைணவ திவ்யதேசம், ராமநாதபுரம் மாவட்டத்தில், திருப்பத்தூர் தாலுக்காவிலிருந்து 7 மைல் தொலைவில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 100 கிமீ. காரைக்குடியிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்ல முடியும். மதுரையிலிருந்து காலை 8 மணிக்கே கிளம்பி, ஏசி காரில் பயணத்தை மேற்கொண்டதால், வெளியே சுட்டெரித்த வெயிலின் கடுமை தெரியவில்லை. நெடுஞ்சாலையில் காரின் வேகம் நூறைத் தொட்டபோது, சிடி பிளேயரில் பாட்டு கேட்கலாம் என்று போட்டால், TMS "நான் ஒரு ராசியில்லா ராஜா" என்று அழ ஆரம்பிக்கவே, பாட்டு கேட்கும் ஆசை போய் விட்டது!
ஒன்றரை மணி நேரத்தில் திருக்கோட்டியூர் சென்றடைந்தோம். காதம்ப மகரிஷி வாழ்ந்து, பெருமானை வழிபட்ட புண்ணியத் தலமிது! அமைதியான சூழலில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பிரகாரம் கொண்ட கோயில் ! தேவர்களும், ரிஷிகளும் ஒரு கோஷ்டியாக (group) ஸ்ரீமன் நாராயணனை இங்கு வணங்கியதால், இத்தலம் திருக்கோட்டியூர் என்ற காரணப்பெயரைப் பெற்றது. அவர்கள் கோஷ்டியாக இங்கு கூடியதன் காரணம், ஹிரண்யனை அழிக்க பெருமானிடம் முறையிடுவதற்காக !
சௌம்ய நாராயணன்
உரகமெல்லணையான் என்றழைக்கப்படும் மூலவர், கிழக்கு நோக்கி புஜங்க சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். பிராட்டிகளுடன் இருந்த உத்சவ மூர்த்தி சௌம்ய நாராயணப் பெருமாள் (மாதவன்) பேரழகு! மிக அற்புதமான சேவை. உத்சவப்பெருமாளின் விக்ரகமும், மற்ற மூன்று பிராட்டியரின் விக்ரகங்களூம் (மூலவர் சன்னதியில் உள்ள இரண்டும், தாயாருக்கான தனிச்சன்னதியில் உள்ள விக்ரகமும்) இந்திரனால் காதம்ப மகரிஷிக்கு வழங்கப்பட்டன என்று தலபுராணாம் கூறுகிறது.
சரபேஸ்வரர்
கோயில் உள்ளே நுழைந்தவுடன், திருமாமணி மண்டபத்தைக் காணலாம். அங்கு சுயம்புவாக உருவான (சற்றே சிதிலமடைந்த) சரபேஸ்வரர் அருள் பாலிக்கிறார். இதற்குப் பின்னால் ஒரு சுவையான பழங்கதை உண்டு. நரசிம்ம அவதாரமெடுத்து ஹிரண்யனை வதம் செய்த பின், பெருமானின் உக்ரத்தைக் கண்டு அஞ்சி அவர் அருகே செல்ல திருமகளுக்கே துணிவு வரவில்லை. அந்த உக்ரத்தால், பூவுலகே அமைதியிழந்தது. அப்போது, சிவபெருமான், திருமாலை சாந்தப்படுத்துவதற்காக 'சரப' (மனித/சிங்க/பறவையின் அங்க அவயங்களால் ஆன உக்ர) வடிவமெடுத்து, நரசிம்மாவதரப் பெருமாளை சண்டைக்கு அழைத்தார். சிறிது நேரத்தில், சரப வடிவில் வந்து தன்னுடன் மோதுவது சிவனே என்றுணர்ந்த பெருமாள், தன் உக்ரத்தை விலக்கிக் கொண்டு சாந்தமானார் என்பது ஐதீகம்!
இத்தலத்திற்கு 'த்வயம் (இரண்டு) விளைந்த திருப்பதி' என்ற காரணப் பெயரும் உண்டு. அதாவது, இரண்டு அருளிச் செயல்கள் நிகழ்ந்த காரணத்தால்! ஒன்று, தேவர்களுடன் அணி சேர்ந்து, திருப்பாற்கடல் அமுதத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்த பரந்தாமனின் தெய்வச் செயல், மற்றொன்று, அஷ்டாட்சர மந்திரத்தை எந்தை ராமானுஜ முனி உலகுக்கு அருளிய புண்ணிய நிகழ்வு!
தாயார்
தாயார் திருமகள் நாச்சியாருக்கும், ஆண்டாளுக்கும் தனிச் சன்னதிகள் உண்டு. தாயார் சன்னதி பூட்டியிருந்ததால், அர்ச்சகருக்கு சொல்லியனுப்பி, காத்திருந்து தாயாரை கண் குளிர சேவித்தோம். திருமாமணி மண்டபத்தின் வடப்புறம் கோதண்டராமர் சன்னதியும், தெற்குப் பக்கம் நரசிம்மர் சன்னதியும் உள்ளன.
நரசிம்மப் பெருமான் கோலங்கள்
இந்த நரசிம்மர் சன்னதி முன்பு தான், திருக்கோட்டியூர் நம்பி, ராமானுஜருக்கு அஷ்டாட்சர மந்திர உபதேசம் செய்தார். வெளிப்பிரகாரத்தில், பரமபத வாசலுக்கு அருகே, ஹிரண்ய வதத்தை விளக்கும் இரண்டு நரசிம்மப் பெருமாளின் சிற்பங்கள், சிறிய சன்னதிகளில் காணப்படுகின்றன.
உபேந்திரன்
ஸ்தித நாராயணன்
இந்த புண்ணியத்தலத்திற்கு ஒரு சிறப்புண்டு. திருப்பாற்கடல் நாதனாக சயன திருக்கோலத்தில் பிரதான சன்னதியில் காட்சி தரும் மூலவப்பெருமாள், இங்குள்ள அஷ்டாங்க விமானத்தின் இடை நிலையில், உபேந்திரன் (க்ஷீராப்திநாதன்) என்ற திருநாமத்துடன், நின்ற திருக்கோலத்திலும், விமானத்தின் மேல் நிலையில், பரமபதநாதனாக, ஸ்தித நாராயணன் என்ற திருநாமத்துடன் (பூமாதேவி மற்றும் பெரிய பிராட்டியுடன்) வீற்றிருந்த திருக்கோலத்திலும் அருள் பாலிக்கிறார் !
இங்குள்ள அஷ்டாங்க விமானம் 96 அடி உயரம் கொண்டது. பலப்பல அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. விமானத்தில், அமர்ந்த கோலத்தில் உடையவரும், பெருமாளின் தசாவதாரமும், இந்திரலோகக் காட்சிகளும், சப்தரிஷிகளும், தேவர்களும், முனிவர்களும் ஆழ்வார்களும் அழகாகச் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
அஷ்டாங்க விமானத் தோற்றம்
கோயிலில் பணி புரியும் முத்துத்தேவர் என்ற பெரியவர் தான், குறுகிய படிக்கட்டு வாயிலாக விமானத்தின் உச்சி வரை சென்று, உபேந்திரரையும், பரமபதநாதனையும் தரிசிக்க உதவி செய்தார். இத்தலத்தைப் பற்றியும், உடையவர் குறித்தும் பல தகவல்களையும், தலம் பற்றிய நாலாயிரப் பாசுரங்களையும் அவர் மடை திறந்தாற்போல் சொல்லியது என்னை நிஜமாகவே ஆச்சரியப்படுத்தியது!
வைணவராய் இருப்பதற்கு, வைகுண்டநாதன் மேல் பக்தி ஒன்றே போதுமானது என்பதை அவர் உணர்த்தினார்!! 'இங்கு எம்பெருமானார் என்றழைக்கப்படும் ராமானுஜர், திருக்காஞ்சியில் பாஷ்யகாரர் என்றும், ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என்றும் அழைக்கப்படுகிறார்' போன்ற பல உபரித் தகவல்களையும் வழங்கிய முத்துத்தேவருக்கு சன்மானம் வழங்கி நன்றி தெரிவித்தேன்.
எந்தை இராமானுச முனி
மற்றுமொரு சிறப்பு, ராமானுஜர் இக்கோயிலின் கோபுரத்திலிருந்து தான், தன் ஆச்சார்யரான திருக்கோட்டியூர் நம்பி அவருக்கு உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை உரக்கக் கூவி, அதன் அர்த்தத்தை சாதி பேதமின்றி உலகத்தார் அனைவரும் அறிந்து கொள்ளும்படி செய்தார். ரகசியமாக வைத்திருக்க வேண்டிய மந்திரத்தை ஊருக்கே உபதேசித்த ராமானுஜரிடம் திருக்கோட்டியூர் நம்பி, 'குருவின் பேச்சைக் கேட்காத சீடன் நரகத்துக்குச் செல்வான்' என்று கோபமாகக் கூற, அதற்கு ராமானுஜர், "இதனால் நான் ஒருவன் நரகத்துக்குச் சென்றாலும், என் உபதேசத்தைக் கேட்ட மக்கள் அனைவருக்கும் நாராயண கடாட்சமும், மோட்சமும் கிடைக்குமே, என்னை மன்னியுங்கள்!" என்று பதிலுரைக்க, தன் தவறை உணர்ந்த நம்பி, அவரை ஆரத்தழுவி, "நீரே எம்பெருமானார்" என்று மகிழ்ச்சியுற்றார். ராமானுஜர், 'எம்பெருமான்' என்று அழைக்கப்படுவது, இந்த நிகழ்வை வைத்துத் தான்!
நர்த்தனக் கண்ணன்
கோயிலில் திருக்கோட்டியூர் நம்பி மற்றும் உடையவரின் விக்ரகங்கள் உள்ளன. மூலவர் சன்னதியில் சந்தானகிருஷ்ணரின் திருவிக்ரகத்தையும் காணலாம். இவரை வேண்டி விளக்கு பூஜை செய்யும் பெண்டிருக்கு நல்ல துணையும் பிள்ளைப்பேறும் கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும், இத்தலம் 'தெற்கின் பத்ரிநாத்' (Badri of the South) என்று போற்றப்படுகிறது. பெரியாழ்வார், தனது மங்களாசாசனப் பாசுரங்களில் (21), திருக்கோட்டியூரை 'ஆயர்பாடி' என்றே புகழ்ந்து பாடியுள்ளார்!
புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் உண்டு. வைகுண்ட ஏகாதசியும், ஆடிப்பூரமும் சித்திரை மாதத்தில் பிரம்மோத்சவமும் இங்கு கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள தீர்த்தம் (குளம்) தேவ புஷ்கரிணி என்றழைக்கப்படுகிறது. இங்குள்ளதைப் போன்ற (சற்றே அரிதாகக் காணப்படும்) அஷ்டாங்க விமானத்தை மதுரை திருக்கூடல் தலத்திலும், காஞ்சியில் அமைந்த வைகுந்தப் பெருமாள் (பரமேஸ்வர விண்ணகரம்) கோயிலிலும் காணலாம்.
திருப்பதி, திருவரங்கத்தை அடுத்து அதிகமான பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது திருக்கோட்டியூர் தான். இத்திருத்தலத்தை நம்மாழ்வார் 10 பாசுரங்களிலும், பெரியாழ்வார் 21 பாசுரங்களிலும், திருமங்கையாழ்வார் 13 பாசுரங்களிலும், பூதத்தாழ்வார் 2 பாசுரங்களிலும், பேயாழ்வார் 1 பாசுரத்திலும், திருமழிசையாழ்வார் 1 பாசுரத்திலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். அவற்றில், சிலவற்றைக் காணலாம்.
பெரியாழ்வார்
13@..
வண்ண மாடங்கள்சூழ் *திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளராயிற்றே.
18@
கையும் காலும் நிமிர்த்துக் *கடார நீர்*
பையவாட்டிப்* பசுஞ்சிறு மஞ்சளால்*
ஐயநாவழித்தாளுக்கு* அங்காந்திட*
வையம் ஏழும் கண்டாள்* பிள்ளை வாயுளே.
173@
கொங்கும் குடந்தையும்* கோட்டியூரும் பேரும்*
எங்கும் திரிந்து* விளையாடும் என்மகன்*
சங்கம் பிடிக்கும்* தடக்கைக்குத் தக்க*நல்
அங்கமுடையதோர் கோல்கொண்டுவா.
அரக்குவழித்ததோர் கோல்கொண்டுவா.
363@
உரகமெல்லணையான்கையில்* உறைசங்கம்போல்மடவன்னங்கள்*
நிரைகணம்பரந்தேறும்* செங்கமலவயல் திருக்கோட்டியூர்*
நரகநாசனைநாவில் கொண்டழையாத* மானிடசாதியர்*
பருகுநீரும்உடுக்குங்கூறையும்* பாவம்செய்தனதாங்கொலோ.
369@
காசின்வாய்க்கரம்விற்கிலும்* கரவாதுமாற்றிலிசோறிட்டு*
தேசவார்த்தைபடைக்கும்* வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்*
கேசவா. புருடோத்தமா.* கிளர்சோதியாய். குறளா. என்று*
பேசுவார்அடியார்கள்* எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே.
திருமங்கையாழ்வார்
1840@
வெள்ளியான் கரியான்* மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை,* எமக்கு-
ஒள்ளியான் உயர்ந்தான்* உலகேழும் உண்டுமிழ்ந்தான்,*
துள்ளுநீர் மொண்டு கொண்டு* சாமரைக் கற்றை சந்தன முந்தி வந்தசை,*
தெள்ளுநீர்ப் புறவில்* திருக்கோட்டியூரானே. 9.10.3
க்ருதா யுகத்தில் வெண்ணிற மேனியானாகவும், கலியுகத்தில் கருமை நிறத்தவனாகவும், த்வாபர யுகத்தில் மரகதமணியால் ஆன பச்சை மாமலை போன்றவனாகவும் திகழ் பரந்தாமனே நித்யசூரிகளின் இறைவன், உணர்வதற்கரிய உயர்ந்த பரம்பொருள்! இத்தனை சிறப்புடையவனாக இருந்தும், தன்னுருவை முழுவதுமாக எனக்குக் காட்டி எனக்கருளியவன் அந்த எம்பெருமான்! அவனே, பிரளய காலத்தில், ஏழுலகையும் (காக்க வேண்டி) உண்டு பின் உமிழ்ந்தவன். வாசனை மிகு சந்தன மரக்கிளைகளை சுமந்து வரும் ஆற்று நீர் ஓடி வரும் செழுமை மிக்க திருக்கோட்டியூரில், அப்பிரானே எழுந்தருளியுள்ளான்.
1842@
வங்க மாகடல் வண்ணன்* மாமணி வண்ணன் விண்ணவர் கோன்* மதுமலர்த்
தொங்கல் நீள்முடியான்* நெடியான் படிகடந்தான்,*
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி* மாகமீது உயர்ந்தேறி,* வானுயர்-
திங்கள் தானணவும்* திருக்கோட்டியூரானே.9.10.5
வங்கக்கடலையொத்த கருமை நிறத்தவனும், நீலமணி வண்ணனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனும், தேன்மலர் சூடிய நீண்ட முடி உடையவனும், நெடியவனும், ஒரு சமயம் தன் திருவடியால் உலகளந்தவனும் ஆன எம்பெருமான், மணிக்கற்கள் பதிக்கப்பட்ட வானளாவிய மாடங்களில் பறக்கும் வெண்கொடிகள் வெண்ணிலவைத் தொடுவது போல் காட்சியளிக்கும் அழகிய திருக்கோட்டியூரில் கோயில் கொண்டுள்ளான்!
1844@
கன்று கொண்டு விளங்கனி எறிந்து* ஆநிரைக்கு அழிவென்று,* மாமழை-
நின்று காத்துகந்தான்* நிலமாமகட்கு இனியான்,*
குன்றின் முல்லையின் வாசமும்* குளிர்மல்லிகை மணமும் அளைந்து,* இளந்-
தென்றல் வந்துலவும் * திருக்கோட்டியூரானே. 9.10.7
கன்று வடிவில் வந்த வத்சாசுரனை விளாங்கனி மரத்தில் எறிந்து மாய்த்தவனும், கோவர்த்தன மலையை குடையாக்கி பசுக்களையும், ஆயரையும் பெருமழையிலிருந்து காத்து ரட்சித்தவனும், பூமி பிராட்டிக்கு உகந்தவனும் ஆன எம்பெருமான், மலையில் பூக்கும் முல்லை, மல்லிகை மலர்களின் வாசத்தை சுமந்து வரும் இளந்தென்றல் வீசும் திருக்கோட்டியூரில் ஆட்சி புரிகிறான்!
பூதத்தாழ்வார்
2227@
பயின்றது அரங்கம் திருக்கோட்டி,* பன்னாள்-
பயின்றதுவும்* வேங்கடமே பன்னாள்,* - பயின்றது-
அணிதிகழும் சோலை* அணிநீர் மலையே*
மணிதிகழும் வண்தடக்கை மால்.
2268@
இன்றா அறிகின்றேன் அல்லேன்* இருநிலத்தைச்-
சென்று ஆங்கு அளந்த திருவடியை,* - அன்று-
கருக்கோட்டியுள் கிடந்து* கைதொழுதேன் கண்டேன்,*
திருக்கோட்டி எந்தை திறம்.
பேயாழ்வார்
2343@
விண்ணகரம் வெ·கா* விரிதிரைநீர் வேங்கடம்,*
மண்ணகரம் மாமாட வேளுக்கை,*- மண்ணகத்த
தென்குடந்தை* தேனார் திருவரங்கம் தென்கோட்டி,*
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
திருமழிசையாழ்வார்
2415@
குறிப்பு எனக்குக்* கோட்டியூர் மேயானையேத்த*
குறிப்பு எனக்கு நன்மை பயக்க*
வெறுப்பனோ வேங்கடத்து மேயானை* மெய்வினைநோய் எய்தாமல்*
தான்கடத்தும் தன்மையான் தாள்
என்றென்றும் அன்புடன்
பாலா
15 மறுமொழிகள்:
Test comment !
பகிர்வுக்கு நன்றி.
பலர் வலைப்பதிவில் இது போல பயணகட்டுரை எழுதுகிறார்கள்.நல்லதொரு முயற்சி.
ஆனால் பல விசயங்கள் மிஸ்ஸிங்.
இதே போல் பயண கட்டுரை எழுதுபவர்கள் போகுமிடங்களில் தங்குமிட வசதி சாப்பாட்டு டாய்லெட்வசதி கார் கயறிங் விலைவிபரம் போன்ற சிறு குறிப்புகளையும் தங்களுடைய பயணக்கட்டுரையில் குறிப்பிட்டால் வெளிநாடுகளிலிருந்து இந்தப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு
உதவியாக பலனாக இருக்கும்.
பாலா
கோவில் கோபுரத்தின் படம் போட்டு அஷ்டாங்க விமானம் என தலைப்பிட்டிருக்கிறது :)
தீவு, சங்கர்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
தீவு,
இத்தலம், காரைக்குடிக்கு அருகில் இருப்பதால், அங்கு தான் தங்க இடவசதி உண்டு. திருக்கோட்டியூரில் அவ்வளவாக வசதிகள் எதுவும் இல்லை. நானே, மதுரையில் தங்கித் தான், சுற்றியுள்ள கோயில்களுக்கு விஜயம் செய்தேன்.
சங்கர்,
தவறை சரி செய்து விட்டேன் :)
பகிர்வுக்கு நன்றி,பாலா ...
நல்ல பதிவு. அருமையான படங்கள். நன்றி
//திருமாலிருஞ்சோலை (கல்லழகர்)// கள்ளழகர் என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்.
திருக்கோட்டியூர் எம்பெருமானார் இராமானுசரின் தரிசனத்தை மிக அருமையாக சேவித்து வைத்தீர்கள், பாலா!
சௌம்ய நாராயணனின் சௌம்யமான படங்கள்! நன்றி.
//ராமானுஜர், திருக்காஞ்சியில் பாஷ்யகாரர் என்றும்//
திருமலையிலும் பாஷ்யகாரர் தான்!
ஸ்ரீபாஷ்யத்தை எழுதத் துவங்கு முன்னர் திருவேங்கடமுடையானைச் சிறப்பித்து...பிரம்மநி ஸ்ரீநிவாசே எனத் துவங்கியதால், இங்கும் "பாஷ்யக்" காரர் தான்! அவர் சன்னிதியிலும் அப்படியே பெயர்ப் பலகை இருக்கும். அடுத்த முறை பாருங்கள்!
//அஷ்டாங்க விமானத்தை மதுரை திருக்கூடல் தலத்திலும், காஞ்சியில் அமைந்த வைகுந்தப் பெருமாள் (பரமேஸ்வர விண்ணகரம்) கோயிலிலும் காணலாம்.//
சென்னையிலும் உண்டே! சொல்லுங்க பார்ப்போம் :-)
என்ன பாலா...
கோடை விடுமுறைக் கும்மாளமா?
இத்தனைத் திருத்தலங்களுக்கும் பயணமா? சூப்பர்...
அப்படியே ஒவ்வொரு தலமா, பாதிவு போட்டிக்கிட்டே எங்களையும் கூட்டிப் போய் வாங்க! :-)
அப்புறம் பாலா...
கோட்டியூருக்கு, மற்ற ஆழ்வார்களின் மங்களாசாசனம் தந்த நீங்கள், நம்மாழ்வாரை மட்டும் விடுத்தது ஏனோ? :-)
கண்ணபிரான்,
வருகைக்கு நன்றி.
//
சென்னையிலும் உண்டே! சொல்லுங்க பார்ப்போம் :-)
//
பார்த்தசாரதி கோயில் விமானம் ஆனந்த விமானம் என்றழைக்கப்படுகிறது. அது தவிர,
திருநின்றவூர் - உத்பல விமானம்
திருயெவ்வுள் - விஜயகோடி விமானம்
திருநீர்மலை - தோயகிரி விமானம்
திருவிடந்தை - கல்யாண விமானம்
திருக்கடல்மல்லை - ககனக்ருதி விமானம்
இவற்றில் எது அஷ்டாங்க வகைப்பட்டது ?
எ.அ.பாலா
கண்ணபிரான்,
இப்போது தான் ஞாபகத்தில் ஒரு பிளாஷ் அடித்தது. நீங்கள் உத்திரமேரூர் கோயிலை குறிப்பிடுகிறீர்களா ?
எ.அ.பாலா
கண்ணபிரான்,
//
அப்புறம் பாலா...
கோட்டியூருக்கு, மற்ற ஆழ்வார்களின் மங்களாசாசனம் தந்த நீங்கள், நம்மாழ்வாரை மட்டும் விடுத்தது ஏனோ? :-)
//
வேண்டுமென்றே, திருவாய்மொழிச் செம்மலை விடுவேனா ? எல்லாம் மறதி தான் காரணம் :)
நீங்களே பின்னூட்டத்தில் சொல்லி விடுங்களேன் !!!
எ.அ.பாலா
//திருநின்றவூர் - உத்பல விமானம்
திருயெவ்வுள் - விஜயகோடி விமானம்
திருநீர்மலை - தோயகிரி விமானம்
திருவிடந்தை - கல்யாண விமானம்
திருக்கடல்மல்லை - ககனக்ருதி விமானம்//
ஆகா
உங்களைக் கேள்வி கேட்டால், மடை திறந்து வெள்ளம் பாயும் போல இருக்கே! பாருங்க இன்னும் சில விஷயம் தெரிஞ்சிக்கிட்டோம்! :-)
பாலா,
நான் சென்னை திவ்யதேசங்களைச் சொல்ல்வில்லை.
நம்ம அடையார் அஷ்டலக்ஷ்மி ஆலயத்தைத் தான் சொன்னேன். அங்கு அட்டாங்க விமானம் தான்!
//வேண்டுமென்றே, திருவாய்மொழிச் செம்மலை விடுவேனா ? எல்லாம் மறதி தான் காரணம் :)
நீங்களே பின்னூட்டத்தில் சொல்லி விடுங்களேன் !!!
//
தேடினேன் பாலா.
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன்!
சில வலைத்தளங்களில் அவர் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாலும்...
ஆழ்வாரின் திருவாய்மொழியிலும் மற்ற விருத்தங்களிலும் திருக்கோட்டியூர் குறிப்பு காணப்படவில்லை!
ப்ரசன்னா,
வருகைக்கும், பிழை திருத்தியமைக்கும் நன்றி.
********************************
கண்ணபிரான்,
மீள்வருகைக்கு நன்றி.
//
தேடினேன் பாலா.
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன்!
சில வலைத்தளங்களில் அவர் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாலும்...
ஆழ்வாரின் திருவாய்மொழியிலும் மற்ற விருத்தங்களிலும் திருக்கோட்டியூர் குறிப்பு காணப்படவில்லை!
//
நான் தேடி கிடைக்காததால் தான், தங்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தேன் :) எனக்குத் தெரிந்தவரை திருக்கோட்டியூருக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் இல்லை ! இருந்தாலும், I have to check with Prabandham and divyadesam experts !
எ.அ.பாலா
திருக்கோட்டியூர் தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
http://www.mapsofindia.com/maps/tamilnadu/districts/sivaganga.htm
இடுகையிலும் பின்னூட்டங்களிலும் இத்தலத்தைப் பற்றிய பல செய்திகளை அறிந்து கொண்டேன் பாலா. பாசுரங்களையும் படித்து அனுபவித்தேன். நன்றிகள்.
Post a Comment